Tuesday, 13 December 2011

சான்றோருக்குத் தீங்கிழைத்தல்

நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; பாவமற்ற, பரிசுத்தமான ஒருவருக்கு எவன் தீங்கு செய்தாலும்; காற்றுக்கு எதிராகத் தூவிய மண் தூவியவன் மேலே வந்து விழுவதுபோல், அந்த மூடனைப் பாவம் பற்றிக் கொள்கிறது.

தண்டிக்கத் தகாதவர்களையும் குற்றமற்ற நல்லவர்களையும் தண்டித்துத் துன்பப் படுத்துவோர் பின் கூறப்பட்டிருக்கும் பத்து நிலைகளில் ஒன்றை அடைவார்கள்

1.வேதனை
2.நஸ்டம்
3.உடலில் சேதம்
4.பெரு நோய்கள்
5.சித்தபிரமை
6.அரச தண்டனை
7.பயங்கரமான குற்றச்சாட்டு
8.உறவுகளை இழத்தல்
9.பொருள் அழிவு
10.வீடுகளில் இடி விழும்


நிரபராதியான ஒருவருக்கு எவன் தீங்கு செய்கிறானோ அவன்தான் நரகத்துக்குப் போவான்.

தீவினை அச்சம்

"தீவினை" என்பது தீய செயல்கள்.
 தீய செயல்கள் என்பது, நான் என்னும் அகந்தையில், தன் நலனப் பெரிதெனக் கருதி, பிறருக்குக் கேடு செய்தல் ஆகும்.

"தீவினை  அச்சம்" என்பது தீய செயல்களைக் கண்டு அஞ்ச வேண்டும். ஒருவன் தன் நலனைப் பெரிதெனக் கருதி பிறருக்குக் கேடு செய்தான் என்றால், அச்செயலால் மற்றவருக்குத் துன்பம் வருவதோடுமட்டுமின்றி, இவனுக்கும் அதன் பிற்பயன் துன்பம் தரும். தனக்கும், பிறருக்கும் துன்பம் கொடுப்பதால், தீய செய‌ல்களைக் கண்டு அஞ்ச வேண்டும்.

ஏன் அஞ்ச வேண்டும்?
தீய செயல்கள் இரண்டு உலகத்திலும் துன்பத்தைக் கொடுப்பதால் தீய செய‌லைக் க‌ண்டு அஞ்ச‌ வேண்டும்.

எப்ப‌டி அஞ்ச‌ வேண்டும்?
நெருப்பைவிட‌க் கொடிய‌து என‌க் க‌ருதி அஞ்ச‌ வேண்டும்.

இத‌னைத்தான் திருவ‌ள்ளுவ‌ர் இவ்வாறு சொல்கிறார்.
     தீய‌வை தீய‌ ப‌ய‌த்த‌லால் தீய‌வை
     தீயினும் அஞ்ச‌ப் ப‌டும்
அதாவ‌து, தீய‌ செய‌ல்க‌ள் பெரும் துன்ப‌த்தைக் கொடுப்ப‌தால், தீய‌ச் செய‌ல்க‌ள் நெருப்பினும் கொடிய‌தாக‌க் க‌ருதி அஞ்ச‌ வேண்டும்.நெருப்பு அதிக‌ ப‌ட்ச‌ம் இந்த‌ உட‌லைத்தான் அழித்து ம‌ர‌ண‌த்தைக் கொடுக்கும். நெருப்பு ஒருவ‌னை ந‌ர‌கத்துக்கு அனுப்பாது. ஆனால் தீய‌ செய‌ல்க‌ளோ, இங்கு துன்ப‌த்தைக் கொடுத்து, உட‌லை விட்டு உயிர் பிரிந்த‌ப்பின் ந‌ர‌க‌த்துக்கு அனுப்பும். ஆக‌வே, தீய‌ செய‌ல்க‌ளைத் தீயினும் கொடிய‌தாக‌க் க‌ருதி அஞ்சி, பாவ‌ங்க‌ள் செய்யாம‌ல் வாழ‌ வேண்டும் என்று திருவ‌ள்ளுவ‌ர் சொல்கின்றார்.

Wednesday, 19 October 2011

கொடிய எண்ணங்கள்

மனத்தில் எழும் கொடிய எண்ணங்களால் உந்தப்பட்டு, நலம் தரும் நல்லுபதேசங்களை, ஊயிர்கள் அலட்சியப் படுத்திப் புறக்கணிக்கன்றன!
ஒரு கள்வனைப்போல், மனத்தில் எழும் கொடிய எண்ணங்கள், உயிர்களின் தூய்மையான வளர்ச்சிக்கு இடையூராக இருக்கின்றன.

விழித்தெழுகங்கள்! பாவங்கள் செய்யாதீர்கள்!

பிறவிப் பெருங்கடலில் உயிர்களின் அவல நிலையைக் கொஞ்சம் தியானியுங்கள்.

இந்த மனித உடல் என்னும் வீடு, மாதந்தோறும் ஆண்டு தோறும் அழிந்து வருகிறது.

எந்நேரத்திலும் சரிந்து விழக்கூடிய இது வாழ்வதற்கு அபாய‌கரமானது.

தப்பித்துக்  கொள்ளுங்கள்! பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள்!

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!

பாவக் கருமங்கள் செய்வோர் தமக்கும் மரணம் வரும் என்பதைச் சிந்திப்பதில்லை.

நிலையற்ற இந்த உடல் அழிவதற்கு முன், உடலைவிட்டு உயிர் பிரிவதற்கு முன், பாதுகாப்பைத் தேடிக்கொள்ளுங்கள்.

புனித தர்ம உபதேசங்களை வாழ்வில் கடைபிடியுங்கள்!
                                                                                                                                     -மிலர்ப்பா

தண்டனை

எந்த ஒரு செயல், செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

எவ்வகையான செயல் மனத்தை வருத்தும்?
பாவச் செயல், அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருத்தும்.

பாவ‌ம் என்றால் என்ன‌?
பாவ‌ம் என்ப‌து, த‌ன் சுக‌த்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிற‌ருக்குத் தீங்கு செய்த‌லாகும். தீய‌வை ந‌ம‌க்குத் துன்ப‌த்தைத் த‌ருவ‌துபோல், பிற‌ருக்கும் அது துன்ப‌த்தைத் த‌ரும் என்ப‌தை ம‌ற‌ந்து, நாம் ஒரு இலாப‌த்தை நாடி, பிற‌ருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்கிறோம்.

இதையே ப‌க‌வான் புத்த‌ர் இவ்வாறு விள‌க்கியுள்ளார்.
"இர‌க‌சிய‌மாக‌வோ, ப‌ல‌ர் அறிய‌வோ, இப்போது நீ தீய‌ செய‌லைச் செய்தாய் என்றால், பின்னால் அத‌னிட‌மிருந்து த‌ப்ப‌ முய‌ன்றாலும், நிச்ச‌ய‌மாக‌ நீ துன்ப‌ப்ப‌டுவாய்."

திருவ‌ள்ளுவ‌ரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்.

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேல‌வாம்"

அதாவ‌து, துன்ப‌ம் யாவும் துன்ப‌ம் செய்தோரையே நாடும்.

Sunday, 18 September 2011

கோபத்தினால் ஏற்படும் துன்ப‌ங்க‌ள்

        
i)   மனதின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தீய எண்ணங்களால் கேடு வரும்.

ii)  நாவின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான சொற்களால் கேடு வரும்.

iii) உடலின் கோபம் காக்க வேண்டும்; காக்காவிட்டால் தவறான செயல்களால் கேடு வரும்.

கோபத்தினால் வரும் துன்பங்களை பகவான் புத்தரும், திருவள்ளுவரும் இவ்வாறு விளக்குகிறார்கள்.


1.கோபக்காரன் முகமலர்ச்சியை இழப்பான்.
2.கோபக்காரன் அகமலர்ச்சியை இழ்ப்பான்.
3.கோபக்காரன் தூக்கம் இழப்பான்.
4.கோபக்காரன் நண்பர்களை இழப்பான்.
5.கோபக்காரன் உறவு இழப்பான்.
6.கோபக்காரன் அவமானப்படுவான்.
7.கோபக்காரன் புகழ் இழப்பான்.
8.கோபக்காரன் பொருள் இழப்பான்.
9.கோபக்காரன் நன்றி மறந்து கேடு செய்வான்.
10.கோபம் கோபத்தோடு மோதினால் அழிவு வரும்.
11.கோபக்காரன் அடுத்த உலகில் துன்பப்படுவான்.

Thursday, 28 April 2011

சிந்திக்கச் சில.........


1.குறைபாடுகள்  உடையவ
ன்தான் மனிதன். குறை காண்பனும்  மனிதன்தான். பிறர் குறைகளைத் தேடுபவன் அரை மனிதன். தன் குறைகளைத் தேடுபவன் முழுமனிதன்.

2.பிறர் குறைபாடுகளை நம் கண் முன்னே காண்கிறோம். நம்குறை பாடுகளை மறைக்கின்றோம்.

3.மலர்களில் மணம் கமழுவது போல் நல்வினையால் புகழ் பரவும்.

4.கொடுப்பதால் நாம் செல்வம் பெருகும்; பெற்றுக் கொள்வதால் அன்று.

5.கருத்துடன் காண இரு கண்களூம் கருத்துடன் கேட்க இரு காதுகளும் குறைவாகப் பேச ஒரு நாக்கும் உள்ளன.

6.மிகப் பெரிய வெள்ளமும்  வடியும். மிகப் பெரிய புயலும் அமைதியாகும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.

7.கோபம் ஆறக் கூடியது. வெறுப்பு ஆறாது.வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்.

8.நம்மிக்கை இல்லாத வழிபாடு உயிரற்றது.

9.இரக்க குணம் மனிதனை உருவாக்குகிறது. அரக்க குணம் மனிதனை மிருகமாக்கிறது.

10.நற்செயலுகளுக்கு அடிப்ப்டையே நல்லெண்ணம்தான்.

11.அன்பு  உள்ள இடத்தில் அமைதியும் இன்பமும் இருக்கும்.

12.அன்பும் அறனும் இல்லாதவன் இறந்தவனுக்குச் சமம்.

13.அருட் செல்வத்தைப் பெற்று எல்லா உலகங்களுக்கும் மன்னனாக சீரும் சிறப்புமாக‌ வாழலாமே!

14.தீய எண்ணங்களை அழிக்க  இறைவழிபாட்டைத் துணயாகக் கொள்.

15.சரியான கருத்துகள் மனதில் இருந்தால் நல்ல எண்ணம், இனிமையான சொல், சுகம் தரு
ம் செயல்கள் தோன்றும்.

Wednesday, 27 April 2011

எது சிறந்த தானம்?

தானத்தில்சிறந்த தானம்
நற்செயலில் சிறந்த நற்செயல்
அன்பில் சிறந்த அன்பு எதுவென்றால்
அறம்  ‌அறியாமல் வாழ்வோருக்கு
மீண்டும் மீண்டும் அறத்தை உபதேசம் செய்து,
அவர்களையும் அறநெறியில் ஒழுகச் செய்வதுவும்,
பக்தி இல்லாமல் வாழ்வோருக்கு
மீண்டும் மீண்டும் பக்தியை உபதேசம் செய்து
அவர்கள் உள்ளத்தில் பக்தியை பதிய வைப்பதுவும்,
அறிவும் ஒழுக்கமும் இல்லாதோருக்கு
கல்வியையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தருவதுவும்;
அருளில்லாதோருக்கு அருளை உபதேசம் செய்வதுவும்;
அதுவே, தானத்தில் சிறந்த தானம்
நற்செயலில் சிறந்த நற்செயல்
அன்பில் சிறந்த அன்பு
                                                                                           பகவான் புத்தர்

Tuesday, 26 April 2011

நம் பலவீனங்கள்

நம் அனைவருக்கும் பல பலவீனங்கள் உண்டு. ஆதலால் தவறுகள் செய்துவிட வாய்ப்புகள் உண்டு. நாம் அனைவருக்கும் விருப்பும் வெறுப்பும் அறியாமையும் உண்டு. ப‌லவீனங்கள் நம் எல்லாரிடமும் வெவ்வேறு அளவில் விளங்குகின்றன.

அறியாமையில் வாழும் ஒரு மனிதனின் அருகில் சென்று பார்ப்போம். அவரது மனம் தொந்தரவுகளாலும், குழப்பங்களாலும், இருளாலும் தெளிவிழந்து  உள்ளதைக் காணலாம்.. எதிர்பாராத மாற்றங்களால் உண்டாகும் மாற்றங்களும் நிறைவேறாத ஆசைகளும்  கவலையை ஊண்டாக்குகின்றன.

கவலையை உண்டாக்கக் காரணமாக உள்ள ஆசை எனும் உந்துதலை ஊட்டி  வளர்ப்பதற்கு முக்கிய காரணம் அறியாமையே!  அறிவால் அறியாமையை அகற்றப்படும் பொழுது அச்சமும் கவலையும் மறைகின்றன.

யாரையும் குறை கூறாமல் தவறு எங்கே என்று தேட வேண்டும். சிக்கல்களைப் பிற இடத்தில் தேடுவதில் பயன் ஏது? பலவீனங்களை ஒத்துக் கொள்ள வேண்டும். மனிதன் ஏதேனும் காரணங்கள் கண்டுபிடித்து தனது செயல்களை நியாயப்படுத்தி தான் மாசு அற்றவன் என் போலி தோற்றத்தை உருவாக்க முயல்கிறான்.

பிறர் குற்றம் காண்பது எளிது.அறிதேயாம் தன்குற்றம் காண்பது. குற்றம் சாட்டப்படாதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. உங்களுக்கு உள்ளது பெரிய பிரச்னை என்றால் அதை சிறிதாக்கமுயலுங்கள்.சிறிய பிரச்னை என்றால் அதை இல்லாததாக்க  முயலுங்கள்.

Monday, 25 April 2011

திட்டமிட்ட செயல்களும் வினைப்பயனும்

நாம் திட்டமிட்டு வேண்டுமென்று செய்யும் செயல்களின் வினைப்பயனிலிருந்து தப்ப முடியாது.

நாம் மனதால் விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குக் கரும பலன் உண்டென்றும், அவற்றின் கருமபலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை என்றும் பகவான் புத்தர் கூறியுள்ளார்.

"திட்டமிட்டுச் செய்த கருமங்களின் பலனை அழிக்க முடியாது; கரும பலனிலிருந்து தப்ப முடியாது; அவற்றின் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. இந்த உலக வாழ்விலோ, அல்லது எதிர்கால பிறப்பிலோ அவற்றின் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை. திட்டமிட்டுச் செய்த தீய கருமங்களின் துன்பப் பலனை அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.

திட்டமிட்ட செயல்கள் என்பது, நாம் மனதால் விரும்பி வேண்டுமென்று செய்யும் செயல்களாகும். அதாவது நாம் மனதால் விரும்பி எண்ணும் எண்ணங்களும்,மனதால் விரும்பி பேசும்  சொற்களும், மனதால் விரும்பி உடலால் செய்யும் செயல்களும் வேண்டுமென்று திட்டமிட்டுச் செய்யப்படும் செயல்களாகும்.

நாம் மனதால் விரும்பி, திட்டமிட்டுச்   செய்யும் செயல்களின் கரும பலன்களிலிருந்து தப்ப முடியாது. என்கிறார் பகவான் புத்தர். அவை நற்செயல்களாயினும், தீய செயல்களாயினும், அதன் பலனை  அனுபவிக்காமல் அவை முடிவுக்கு வருவதில்லை.இப்பிறப்பிலோ அல்லது எதிர்கால பிறப்பிலோ, அவற்றின் பலனைஅனுபவிக்கத்தான் வேண்டும்.

விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தீய செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு லாபமும், இன்பமும் கிடைத்தாலும், பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்கால பிறப்புகளிலோ,அதன் துன்பப்பயனை வருந்தி, புலம்பி, அனுபவிக்கத்தான் வேண்டும். விரும்பி, வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நல்ல  செயலைச் செயபவனுக்கு அப்போது ஒரு நஷ்டம் வந்த போதும் ,பின்னால் இப்பிறப்பிலோஅல்லது எதிர்க்கால பிறப்புகளிலோ,அதன் புண்ணியப்பயனை  இன்புற்று, மகிழ்வுடன் அனுபவிப்பான்.

வினை பயனிலிருந்து தப்பமுடியாதாகையால், துன்பத்தை விரும்பாதவன், எவரொருவருக்கும் துன்பம் தரும் செயல்களைச் செய்யக்கூடாது  என்கிறார் பகவான் புத்தர்.

"எவரொருவர் துன்பப்பட விரும்பவில்லையோ, அவர் தீய  செயல்களைச் செய்யக்கூடாது. இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்."

Thursday, 14 April 2011

விரதம் சிறந்த உபாயம்

நம் குறைபாடுகளைப் போக்க  விரதம் சிறந்த உபாயம்
(துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

நம் குறைபாடுகள் நம் சுகத்தை கெடுக்கும்; நம் நல‌னைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் மன அமைதியைக் கெடுக்கும்; மனம் சஞ்சலம் உண்டு பண்ணும்; அது நம் உள்ளிருந்தே கொள்ளும் வியாதி.

எவை நம் குறைபாடுகள்?
1. உண்மைக்கு மாறான பேச்சு.
2.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்.
2.நட்புடையோரிடம் பொய் பேசுதல்; ஏமாற்றுதல்.
3.க‌டுஞ் சொல் பேசுதல்.
4.பிறர் மனம் புண்படும்படி பேசுதல்.
5.சினம்கொண்டு பேசுதல்; தீங்கு செய்தல்.
6.செய்ய இயலாதவற்றை செய்வேன் என கூறுதல்.
7.வெற்றிபெற வெகுண்டு பெசுதல்.
8.பிறரைப் பழித்துப் பேசுதல்.
9.நல்லோரின் நல்லொழுக்கத்தைப் பரிகாசம் செய்தல்.
10.எளியார் என் பிறரை ஏளனம் செய்தல்.
11.எளிறோரை வருத்துதல்.
12.நட்புக்குரியோரைப் பற்றி பழித்துப் பேசுதல்.
13.பலருக்குமுன் ஒருவரை இகழ்ந்து பேசுதல்.
14.பிறர் செல்வாக்கைக் கண்டு பொறாமைப் படுதல்.
15.பொறாமையால் குற்ற‌மற்றோர்மீது குற்றம் சாட்டுதல்.
16.குற்றம் செய்தும் அது நியாயமானதே என வாதிடுதல்.
17.நம் குற்றத்தை மறைக்க பிறர்மீது பழி சுமத்துதல்.
18.நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்தல்.
19.தற்பெருமையால் தம்மை உயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் பேசுதல்.
20.நான் எனும் அகந்தையில் பிறரை அலட்சியப் படுத்தி அவமதித்தல்.
21.சண்டை சச்சரவு செய்தல்.
22.வம்பு வளர்த்தல்.
23.வீண்பிடிவாதம் செய்தல்.
24.வஞ்ச மனதுடன் பிறரை ஏமாற்றுதல்.
25.பிறர் பொருள்மீது ஆசை.
26.பொருள் இருந்தும் கொடுக்க மனமில்லை.
27.பகட்டையும் ஆடம்பரத்தையும் கண்டு மயங்குதல்.
28.தீயொழுக்கங்களின் புலன்கள் இன்பம்நாடுதல்.
29.துன்பத்தில் உள்ளோருக்கு உதவாமை.
30.நீதிநெறிகள்,சட்ட விதிகளை அலட்சியம் செய்தல்.
31.வேண்டியவர்,வேண்டாதவர் என பாகுபாடு பார்த்தல்.
32.மதிப்புக் குறிரோதை மதியாமல் இருத்தல்.
33.நல்லோரின் அறிவுரையை அலட்சியம் செய்தல்.

இதுபோன்று இன்று,நேற்று கடந்த காலங்களில் எவ்வளவு தவறுகள் செய்திருப்போம். தீவிர முயற்சி மேற்கொள்ளாததால் மீண்டும் மீண்டும் அதே குறைகளைத் தினம் தினம் செய்து மனநிம்மதி இன்றி வாழ்கிறோம்.

ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?
நம் எண்ணங்களில் ஒழுக்கமில்லை;அறமிலலை;தூய்மையில்லை;
நம் சொற்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;
நம் செயல்களில் ஒழுக்கமில்லை;அறமில்லை;தூய்மையில்லை;

இதன் முடிவுதான் என்ன?

சுகம் எங்கே,  சுகம் எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும். நிம்மதி எங்கே,நிம்மதி எங்கே என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும்.சாந்தி எங்கே, சாந்தி எங்கே  என தேடுவோர் நம் சுகத்தை அழிக்கும் பகைவன் நம்மிடமே உள்ளதை அறிந்து  நம் குறைபாடுகளை வில‌க்க வேண்டும்.;

 நம் குறைபாடுகள் நம்மிடையே உள்ளன என்பதை ஏற்காதவர்கள் பலர். அவர்கள் உண்மையை அறியாதவர்கள்; ஏற்காதவர்கள்; அறியாமையில் உள்ளவர்கள்.

தமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கு அவர்கள்  கூறும்  காரணங்கள் என்ன?

1.பிறந்த நேரம் சரியிலலை.
2.கிரகங்கள் சரியில்லை.
3.எல்லாவற்றிக்கும் காரணம் விதிதான்.
4.மனைவி பிள்ளைகள் சரியில்லை.
5.பெயர் பொருத்தம் சரியில்லை.
6.ஜாதகப் பொருத்தம் சரியில்லை.
7.பிறந்த நேரம் சரியில்லை.
8.பெயர் எண் சரியில்லை.
9.வீட்டின் திசை சரியில்லை.
10.வீட்டின் எண் சரிய்ல்லை.
11.வீட்டின் அமைப்புசரியில்லை.
12.அணியும் ஆடையின் நிறம் பொருத்தமில்லை.
13.மோதிரக்கல்  பொருத்தமில்லை.
14.தோஷம் பிடித்துள்ளது.
15.செய்வினை செய்துள்ளார்கள்.

இது போன்ற் காரணங்கள் பல கூறி பரகாரங்கள் தேடுவார்கள்.
நம் உள்ளே இருக்கும் குறைபாடுகளைக் காண  மாட்டார்கள்.

நம் குறைபாடுகளை விலக்குவதற்கு விரதம் ஒரு சிறந்த உபாயமாகும். வாழ்வில் சுகமும், நிம்மதியும், சாந்தியும் பெற விரும்புவோர் தம் குறைபாடுகளைத் தேடி,அவற்றை விட்டுவிட வேண்டும்.

மனமாசுகளைப் போக்க விரதம் ஓர் உபாயம். விரதம் சிறந்த பயிற்சி.

இறைவழியில் நிற்ற‌ல்

இறைவழியில் நடப்பவர்கள் கவனிக்க வேண்டியவைகள்:
1.அனைவரிடமும் அன்பாய் நடந்து கொள்கிறோமா?
2.எதையும் அறிவு பூர்வமாக அணுகுகிறோமா?
3.எப்போதும் எளிமையாகவும், இனிமையாகவும்  இருக்கிறோமா?
4.எதைச் செய்தாலும் திருத்தமாக, பார்ப்பவர் பாராட்டும் வண்ணம் செய்கிறோமா?
5.அறநெறியை உணர்ந்து வாழ்வில் கடைபிடிக்கிறோமா?
6.எல்லாவற்றிலும் லாபத்தைப் பார்க்காமல் வள்ளல்  தன்மையோடு நடந்து கொள்கிறோமா?
7.உலகிற்கு எவ்வாறு பயன் படப்போகிறோம்?
8.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறோமா?
9.நிதானமும் பொறுமையும் கொண்டுள்ளோமா?
10.வேற்றுமை பாராமல் பாகுபாடு  ன்றி உதவுகிறோமா?

Tuesday, 12 April 2011

வெற்றி பெற்ற மனிதர்


1. பயமில்லாமல் இருப்பார்.
2. மனம் விட்டு சிரிப்பார்.
3. யாரையும் வெறுக்க மாட்டார்.
4. அனைவரையும் விரும்பி அன்பு காட்டுவார்.
5. நல்லோரின் மதிப்புப் பெற்றவர்.
6. குழந்தைகள் அவரை விரும்புவர்.
7. வேட‌ம்  போட மாட்டார்.
8. துரோகம் செய்பவர்களைக் கண்டு விலகி நிற்பார்.
9. மனம் தளர மாட்டார்.
10. பிறரின்  சிறந்த குணத்தைக் காண்பார்.
11. பிறருக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்.
12. தன் சமுதாய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செயலைச் செய்வார்.

நல்ல மனிதனின் குணங்கள்

1. உண்மையாக நடந்து கொள்வார்.
2.சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்.
3.உதவி கேட்பவர்களைக் கைவிட  மாட்டார்.
4.செய்ய முடியாதவற்றைச் செய்ய முடியும் என் நம்ப வைக்க மாட்டார்.
5.நடிக்க  மாட்டார்.
6.பிறரைக் குறைகூறி தன் முக்கியதுவத்தை அதிகரித்துக் கொள்ள மாட்டார்.
7.தவறுகளை ஒப்புக் கொள்வார்; திருத்திக் கொள்வார்.
8.தகுந்த முயற்சிகள் எடுத்துக் கொள்வார்.
9.விளம்பரம் தேடிக் கொள்ள மாட்டார்.
10.பிறரின் சிறிய செயலையும் புகழ்ந்து பேசுவார்; பாராட்டுவார்.

Saturday, 9 April 2011

அறநீதியும் தண்டனையும்


        எந்த ஒரு செயல் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபிவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

      எவ்வகையான் செயல்கள் அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்தும்? பாவச் செயல், அதைச் செய்த பின், அதை நினைத்து மனம் வருந்தும். எவ்வகையான செயலின் பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கும்? பாவச் செயலின் பயனை அழுதுகொண்டே  அனுபவிக்க வேண்டியிருக்கும்.
      பாவ கருமங்களைச் செய்தோர், பாவம் பழுக்கும்போது, அதன் பிடியிலிருந்து தப்ப முடியாமல், "பாவம் செய்தேனே!" என் மனம் வருந்தி, அதன் பயனை அழுதுகொண்டே அனுபவிப்பார்கள்.

           பாவம் என்றால் என்ன? பாவம் என்பது, தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீங்கு செய்தலாகும்.

"தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீமை செய்தல்" என்பதன் பொருள் என்ன?

         பிறர் நமக்குத் தீங்கு செய்தால், அது நமக்கு வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்; துன்பத்தைத் தரும். அதுபோல் நாம் பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், அது பிறருக்கும் வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்;  துன்பத்தைத் தரும்.

        தீயவை நமக்குத் துன்பத்தைத் தருவது போல், பிறருக்கும் அது  துன்பத்தைத்  தரும் என்பதை மறந்து, நாம் ஒரு இலாபத்தை நாடி, பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்தவர்களாகிறோம்.

           தன் சுகத்தை நாடி, பாவம் செய்தவனுக்கு, அப்போது ஒரு சுகம் கிடைத்த போதிலும், அது பிறருக்குத் துன்பத்தைத் தரும்; பின்னால் இவனுக்குத் துன்பத்தையே தரும்.

இதையே பகவான் புத்தர் இவ்வாறு விளக்கியுள்ளார்:

 இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது  நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்ப முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்.

           ஆகவே, இப்போது நாம் பிறருக்குத் தீமை செய்தோம் என்றால்,பின்னால் நாமும் அதனால் துன்பப்படுவோம்.

திருவள்ளுவரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்:

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்"

அதாவது, துன்பம் யாவும் துன்பம் செய்தோரையே நாடும்.

இது அறநீதி.அற நீதியை இறைத் தண்டனை என்றும்; வினைப்பயன் என்றும்;  சான்றோர் கூறுவதுண்டு. அறநீதியின் செயல் முறையிலிருந்து  எவருமே தப்ப முடியாது.ஏன்? அறநீதி ஒருபோதும் தவறுவதில்லை.Friday, 8 April 2011

சினத்தை வெல்லும் வழி


சினம் கொண்டு  பெறருக்குத் தீங்கிழைப்போர், இவ்வாறு சிந்திக்க வேண்டும்:

பிறர் த‌ம் மன‌தில் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைத்தால், அது எனக்கு வேதனையும் துன்பமும் தருமே! அது எனக்கு மகிழ்ச்சி தருவதில்லையே!  அதுபோல், நான் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைத்தால், அது அவருக்கும் வேதனையும் துன்பமும் தருமே! அது அவருக்கு மகிழ்ச்சி  தராதே!

பிறர் சினம் கொண்டு எனக்குத்  தீங்கிழைப்பதை விரும்பாத நான், எப்படிச் சினம் கொண்டு பிறருக்குத் தீங்கிழைப்பது?அது எனக்கு வேதனையும், துன்பமும் தருமே! அது  அவருக்கு மகிழ்ச்சி தராதே.

சினம் கொண்டு தீங்கிழைப்போர், அதன் காரணமாகவே  தம் பெருமையை இழைப்பார்களே! பிறரால் வெறுக்கப்படுவார்களே!


சினம் கொண்டு தீங்கிழைப்போர், தீங்கிழைத்ததன் காரணமாகவே இங்கும்  தண்டிக்கப்பட்டு, உடலைவிட்டு உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும் தண்டிக்கப் படுவார்களே!

இவ்வாறு சிந்தித்து, சினத்தை தீமை என அறிந்து, அதன் மேல் வெறுப்படைந்து, அதை விட்டுவிட வேண்டும். அதை மறந்துவிட வேண்டும்.

வாழ்வில் சுகத்தையும், அமைதியையும், நிம்மதியையும், சாந்தியையும் கெடுக்கும் சினத்தை  மறப்பதால் நன்மையே வரும்,  தீமை ஏதுமில்லை. சினத்தை அணைத்துக் கொள்வதால் துன்பமே வரும், நன்மை  ஏதுமில்லை. ஆகவே, சினத்தை மறந்தோருக்கு சினத்தால் இனி துன்பமே இல்லை.

எவருடைய குற்றங்குறைகளும், தாமாகவே விலகுவதில்லை. சினமும்  அதுபோல்தான்.  உடலுக்கு நோய் வந்தால், தக்க மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டும். அதுபோல், தம்முள்ளிருந்தே தம்மைக்  கொள்ளும்  சினத்தையும் தக்க முறைகளால்தான் வெல்ல வேண்டும்.

கோபத்தினால் மாசுபட்டுள்ள மனத்தையும் சரியான முறைகளால்தான் சுத்தப்படுத்த முடியும்.

அதாவது, சரியான பயிற்சிகளால்தான் சினத்தை வெல்ல முடியும். சினத்தின் பிடியிலிருந்து  மீள விரும்புவோர் கீழ்க்காணும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 1) ஆய்வும் நுண்ணறியும்
2) உறுதி கொள்ளுதல்
3)மன்னிப்புக் கோருதல்
4)பிறர் பிழை பொருத்தல்
5)விழிப்புணர்வும் நிதானமும்
6)பக்தியும் தர்ம உபதேசங்களும் மிகவும் உதவும்
7) இடைவிடாத முயற்சி

Tuesday, 29 March 2011

சிந்தனைத் துளிகள்

1.ஒருவனிடம் இருக்கும்  உயர்ந்த ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்பது கல்வியே ஆகும்.

2.கற்றவர் என்பவர் கற்றபடி நிற்பவரே.

3.உண்மையைப் புறக்கணித்து வாழ்ந்து வருபவன் மாய்ந்து போனவனுக்கு ஒப்பாகிறான்.

4.உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால்  எதற்காகவும்  உண்மையைத்  தியாகம் செய்யக் கூடாது.

5.எவன் பிறரது  நற்செயல்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதில்லையோ; அவனால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாது.

6. செயல்கள் சிறியதோ பெரியதோ, நம்மால் செய்யக் கூடியவற்றைச் சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்குரியவர்.

7.வெற்றியின் இரகசியம் எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.

8.உன் உயர்வை உன்னைக் காட்டிலும் உயர்ந்தவனை வைத்து உவமைப்படுத்துவாயாக.

9.பிறர் குற்றம் காண்பதுவும்  தன் குற்றம் மறைப்பதுவும், மடைமையின் முழுமையான அடையாளம்.

10.அமையும் வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுதுகிறவனே உண்மையான பெருமைக்குரியவன்.

நேர்மை என்றால் என்ன?

நேர்மை என்பது நமக்கு நாமே உண்மையாக ஒழுகுதல் ஆகும்.

நேர்மை என்பது உண்மை பேசுதல்.
நேர்மை என்பது பொய்யுரையாமை
நேர்மை என்பது களவு செய்யாமை
நேர்மை என்பது வஞ்சனை செய்யாமை
நேர்மை என்பது பிறரை ஏமாற்றாமை
நேர்மை என்பது கபடமற்ற நடத்ததை

யார்  நேர்மையானவர்?

நேர்மையானவர் உண்மை பேசுவார்; மனமறிய பொய் பேசமாட்டார்; அவருடைய சொல்லில் உண்மை இருக்கும்; பிறர் அறிந்திலர் என்பதற்காகத் தம் மனம் அறிந்த ஒன்றை மறைத்துப் பொய் பேச மாட்டார்.

நேர்மையானவர் களவு செய்ய மாட்டார்; ஏமாற்ற மாட்டார்; வஞ்சனை செய்ய
மாட்டார். அவர் சொல்லிலும் செயலிலும்  உண்மை இருக்கும்.

அவர் சொல் தவறாதவர். எதைச் செய்கிறேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார். அவர்சொல்லிலும் செயலிலும்  முரண்பாடு இருக்காது.

நேர்வழியில் தவறாமல்  நடந்து, நல்வழியில்  பொருள் தேடுவார்; வஞ்சகதினால் பொருளோ, பதவியோ, அதிகாரமோ தேடமாட்டார்.

அவர் கபடமற்றவர்; நடத்தையில் ஒளிவு மறைவு இல்லாதவர்; வெளிஉலகில்
நல்லவர்போல் நடித்து மற்றவர் காணாமல் தீயொழுக்கத்தில் ஒழுகமாட்டார்.

உண்மையில்லாதவற்றை உண்மையென்று பேசமாட்டார்; பொய்யை மெய்போல புனைந்துரைக்க மாட்டார்; அவர் நம்படத்  தகுந்தவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்;

Sunday, 20 March 2011

பக்திக்கு அடிப்படை நல்லொழுக்கம்

(துறவி அவர்கள் ஆற்றிய உரையின்  பகுதி)

             எதற்காக நாம் பக்தி கொள்ள வேண்டும்?

             நாம் நம்மையே ஆராய்ந்து பார்த்தோமென்றால், நம்மிடையே பல‌ குறைபாடுகள்  இருப்பதை உணரலாம். குறைபாடுகள் என்பது  நம்மிடையே உள்ள‌ குற்றம் குறைகள்.

         உதாரணத்திற்கு, பிறர் செல்வாக்கைக் கண்டு  பொறாமைப் பட்டிருப்போம்; பொறாமையினால் குற்றமற்றோர் மீது குற்றம் சுமத்தியிருப்போம்; குற்றம்   செய்துவிட்டு அது  நியாயமானதே  என்று விவாதித்திருப்போம்;  நம் குற்றத்தை மறைக்கப் பிறர் மீது பழிசுமத்தியிருப்போம்; நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்திருப்போம்; தற்பெருமையில் தன்னை உயர்த்தியும், பிற‌ரைத் தாழ்த்தியும் பேசி  இருப்போம்;  நல்லோரின் நல்லொழுக்க நெறிகளைப் பரிகாசித்திருப்போம்; சினம் கொண்டு வைதிருப்போம்; சண்டை சச்சர‌வு செய்திருப்போம்; பிறரைப் பழித்துப் பேசியிருப்போம். இதுபோல் பல குறைபாடுகள் நம்மிடம் இருப்பதை நாம் உணரலாம்.   

             நம்மிடமுள்ள குறைபாடுகளை, நம்மிடமுள்ள அசுத்தங்கள் என்று பெரியோர் கூறுவர். நம்மிடம் பல அசுத்தங்கள்  உண்டென்பதால், நம்மை தூய்மையற்றோர் என்றும், அசுத்தமானவர்கள் என்றும், பெரியோர் கூறுவர். புறத்தே நாம் உடலைக் கழுவி ஆடை ஆபர‌ணங்களால் அழகுபடுத்திக் கொண்ட போதிலும், அகத்தே நம்மிடம் பல குறைபாடுகள் உண்டென்பதால், நம்மை அசுத்தமானவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

            நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் நலனைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் பொருளை அழிக்கும்; நம் சுகத்தைக் கெடுக்கும்; உள்ளிருந்தே கொல்லும் நோயைப் போல், நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் வாழ்வைக் கெடுக்கும்.

            எப்படி நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்குவது?

            பக்தியினால் நம்மிடமுள்ள  அசுத்தங்களை நாம் போக்கலாம். அதாவது, தூய்மையற்ற நாம் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கும்; அசுத்தமான  நாம் நம்மைப் புனிதமாக்கிக் கொள்வதற்கும்; மாசு படிந்துள்ள நம் மனத்தை  நாம் தூய்மை படுத்திக் கொள்வதற்கும்; நாம் பக்தி கொள்ள வேண்டும். உள்ளத்தில் க்தி  கொண்டு,  நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்கினோமென்றால்,  இவ்வுலக வாழ்விலும் சுகம் பெற்று; உடலைவிட்டு  உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும்  தெய்வலோக சிறப்பைப் பெறலாம். இதுவே பக்தி கொள்வதற்கான நோக்கமாகும்.

             உடலில் அழுக்கு இருந்தால் அதை எப்படிப் போக்குவது?

           நீராலும், குளிக்க உபயோகிக்கும் சவர்க்காரத்தினாலும், உடலைச் சுத்தப்படுத்துபவரின் முயற்சியாலும் உடலில் இருக்கும் அழுக்கைப் போக்கலாம். இதுவே உடலைச் சுத்தப்படுத்துவதற்கான சரியான முறையாகும்.

              அதுபோல், தூய்மையற்ற நாம், சரியான முறையால் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.அசுத்தமான நாம் சரியான முறையால் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்; மாசுபடிந்துள்ள நம் மனத்தைச் சரியான முறையால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
              எந்த சரியான முறையில்?

              இறைவனின் அருளால் சான்றோர் அருளியுள்ள தர்ம உபதேசங்களை (ந‌ன்னெறி உபதேசங்களை) கற்க வேண்டும். அல்லது, கல்வி அறிவும் அன்பும் அறமும் பக்தியும் உள்ள நல்லோரை நாடி, அவர்கள் கூறும் தர்ம உபதேசங்களை நம்பும் மனத்துடன் கேட்க வேண்டும்.

               தர்ம  உபதேசங்களை நம்பும் மனதுடன் கேட்கும் ஒருவர், "பாவம் உண்டு; புண்ணியம் உண்டு; நல்வினை உண்டு; தீ வினை உண்டு; நல்லொழுக்கம் உண்டு; தீயொழுக்கம்  உண்டு; செயல்களுக்குப் பிற்பயன் உண்டு; அடுத்த உலகம் உண்டு; அடுத்த உலகில் உயிர்கள் தம் செயல்களின் பலனை அனுபவிக்க வேண்டும்" என இவர் புரிந்து கொள்வார்.

             "குற்றங்களைத் தவிர்த்து, நல்லொழுக்கங்களை  மேற்கொண்டு, நற்கருமங்களைச்
செய்து ந
ல்வாழ்வு வாழ்வோர், இவ்வுலக வாழ்விலும்  சுகம்  பெறுவார்கள்; மரணத்திற்கு அப்பால் அடுத்த உலக வாழ்விலும் தெய்வலோகத்திலும் பிறந்து சுகம்பெறுவார்கள்," என இவர் புரிந்து கொள்வர்.

           இவை யாவற்றையும் புரிந்து கொண்ட இவர், அறியாமையில் இருந்து விலகி, அறிவுடைமையைப் பெறுவார். அறிவுடைமையைப் பெற்ற இவர், த‌ம்மிடமுள்ள அசுத்தங்களைக் காண்பார். அறிவுடைமையினால் தம்மிடமுள்ள அசுத்தங்களைக் கண்ட இவர், அடுத்து அசுத்தங்களைப் போக்க முயற்சி செய்ய வேண்டும்.

              எப்படி முயற்சி செய்ய வேண்டும்?

             உள்ளத்தில் பக்திக் கொண்டு,  இதுநாள்வரை செய்துள்ள குற்றங்களுக்காக உள்ளம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இனிமேலும் இது போன்ற குற்றங்களைச் செய்வதில்லை என உறுதி பூண்டு, தீயொழுக்கத்தில் இனிமேலும் செல்லாமல் தம்மைக் காத்து, நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

             குற்றங்களைத் தவிர்க்கவும், நல்லொழுக்க நெறிகளை மேற்கொள்ள‌வும், மனம் தளர்ச்சி அடையாமல் போராட வேண்டும். மனம் தளர்ச்சி அடையாமல் போராடினாரென்றால், படிப்படியாக அசுத்தங்கள் இவரை விட்டு விலகும். பக்தியிலும் அறத்திலும் நற்குணங்களிலும் நற்பண்புகளிலும் இவர் வளர்ந்து தூய்மை அடைவார். இவ்வுலக வாழ்விலும்  இவர் சுகம் பெறுவார்; மரணத்திற்கு அப்பால் மறு உலகில் தெய்வலோகத்தில் பிறந்து சுகம் பெறுவார்.


           Wednesday, 16 March 2011

உரை:2 அறத்தை மறந்தவர்கள்

                (துறவி  அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

           திருவள்ளுவர் அறத்துடன் வாழ  வேண்டும் என்பதை இவ்வாறு
கூறுகின்றார்.

                    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
                    பழித்தது ஒழித்து விடின்


          மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றால், தலையை மொட்டை அடிப்பதும், தலையில் நீண்ட முடியை வளர்த்துக் கொள்வதும் தேவையில்லை. மனம் மாசுபட்டு, அசுத்தப்பட்டு இருக்கும்போது, எதற்காக வெளிச்சடங்குகள். அதனால் பயனில்லை. உலகம் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னதோ அதைச் செய்யாதே! அதுபோதும் நீ தெய்வலோகம்  போகலாம்; மோட்சத்திற்குப்  போகலாம் என்கிறார் திருவள்ளுவர்.

          இங்கு உலகம் என்பது சான்றோர்களையும்  அறவோர்களையும்  குறிக்கும். புத்தர்,வள்ளுவர் போன்ற அறவோர்கள் சொன்ன அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் இவ்வுலகிலும்  இன்பம் வரும்; அடுத்த உலகிலும் இன்பம் வரும்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது.  இந்த குறுகிய வாழ்க்கையில் நாம் அதிகபட்சம் வாழக்கூடியது ஒரு நூறு ஆண்டுதான்.  இந்தகுறுகிய வாழ்க்கையில் மக்கள் எதைச் செய்ய வேண்டும்? இக்குறுகிய காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது அறம்தான்  என்று வள்ளுவர் கூறுகின்றார்.

                  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
                   உயற்பால தோரும் பழி

மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய  வேண்டியது அறம்தான். அறம் செய்ய வேண்டும் என்றால்  என்ன? அறநெறி அறிந்து, குற்றங்கள் தவிர்த்து வாழ வேண்டும். அறநெறி அறிந்து வாழ வேண்டும் என்றால் என்ன? தர்ம வழியில் காலெடுத்து  நடக்க வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகின்றார்.

உரை:1 அறத்தை மறந்தவர்கள்

  (துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

அறத்தை மறந்து குற்றம் செய்து வாழும் ஒரு மனிதன், தன் குற்றங்களுக்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், வெட்கப்படாமல், நாணாமல்,  தன் குற்றங்களை மிகக் கெட்டிக்காரத்தனமாக மூடி மறைத்து, மக்கள் மத்தியில் நல்லவன் போல் நடந்து கொள்ளலாம். இவ்வாறு நல்லவன் போல் நடந்து கொள்ளும்  ஒருவன், ஆலயம் சென்று பலருக்கு முன்னால்,பல சடங்குகள் செய்து இறைவனை பிராத்தனை செய்தபோதிலும், இவனுடைய மனதிற்கும் வாய்க்கும் ஒற்றுமை இல்லாததால், உண்மையில் இவன் செய்யும் பிராத்தனை இவன் மனமறிந்து சொல்லும் பொய்.ஏன்? இவன் குற்றங்களை இறைவன் அறிவார்.

இதைத்தான் திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகின்றார்.

         வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
         தான்அறி குற்றப் படின்

இன்னொரு மனிதன் அவன் வாழ்வது குடிசையாக இருந்த போதிலும், தான் செய்த குற்றத்திற்காக மன்ம் வருந்தி, வேதனைப்பட்டு, வெட்கி, நாணி அக்குடிசையிலேயே மண்டியிட்டு; இறைவனிடன் மன்னிப்புக்கோரி, போதும் இதுவரை செய்த பாவங்கள்; இனிமேலும் பாவங்கள் செய்வதில்லை,என உறுதி பூண்டு, குற்றங்கள் நீக்கி அறவழியில் நடந்தாரே      என்றால், அந்த மனிதரின் வாழ்க்கை, கரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நிலா வெளியே வரும்போது எப்படி அழ்காக பிரகாசிக்கின்றதோ,அவ்வாறு அவரின் வாழ்வும் பிரகாசமாக அமையும். அது குடிசையாக ருந்த போதிலும், அங்கு இறைவன் இருப்பார்.

Tuesday, 15 March 2011

அறத்தின் நன்மைகள்.....


 தர்மவழியில் நடப்போருக்கு ஐந்து நன்மைகள் வரும் என பகவான் புத்தர் கூறுகிறார்.

1.புகழ் வரும்.
இவர் அறவழியில் நடப்பதால், மக்கள் இவரின் அறத்தையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார்கள்.

2.செல்வம் பெருகும்.
இவர் அறநெறி அறிந்து தேடிய பொருள்,இவருக்கும் உதவும்.இவருடைய பிள்ளைகளளுக்கும் உதவும்.இவருடைய பரம்பரைக்கும் நிலைத்து நிற்கும்.


3.அச்சம் இருக்காது.
இவர் உள்ளத்தில் அச்சம் இருக்காது. எங்கெல்லாம் மக்கள் கூடியிருக்கறார்களோ அங்கெல்லாம் இவர் உள்ளத்தில் அச்சமில்லாமல் போவார். இவரிடம்  குற்றம் இல்லாததால், இவருடைய உள்ளத்தில் அச்சம் எழாது.

4.பயமில்லாத மரணம்.
மரணம் வரும்போது இவர் உள்ளத்தில் அச்சம் எழாது;மனதில் குழப்பம் எழாது.மகிழ்ச்சி எழும். அமைதியாக இறப்பார்.

5. அடுத்த பிறப்பு
உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் இவர் தெய்வலோகத்தில் பிறப்பார்.

Friday, 11 March 2011

RIGHT BELIEVE


DO NOT BELIEVE IN ANYTHING (SIMPLY) BECAUSE
YOU HAVE HEARD IT.

DO NOT BELIEVE IN TRADITIONS BECAUSE THEY HAVE
BEEN HANDED DOWN FOR MANY GENERATIONS.

DO NOT BELIEVE IN ANYTHING BECAUSE IT IS
SPOKEN AND RUMOURED BY MANY.

DO NOT BELEIVE IN ANYTHING (SIMPLY) BECAUSE IT
IS FOUND WRITTEN IN YOUR RELIGIOUS BOOKS.

DO NOT BELEIVE IN ANYTHING MERELY ON THE
AUTHORITY OF YOUR TEACHERS AND ELDERS.

BUT AFTER OBSERVATION AND ANALYSIS, WHEN YOU
FIND THAT ANYTHING AGREES WITH REASON AND IS
CONDUCIVE TO THE GOOD AND BENEFIT OF ONE AND
ALL THEN ACCEPT IT AND LIVE UP TO IT.

BUDDHA

Thursday, 10 March 2011

தம்பிக்கு...


தம்பி, உன் திறமையை நன்கு அறிந்து கொள். அது உன்னுள் மறைந்துள்ளது. உன் திறமையை வளர்த்துக் கொள்ள நீ உழைக்க வேண்டும். அதிகம் வாசி. நிறையத் தேடு. தேடலை நிறுத்தாதே.உன்மேல் நம்பிக்கைக்கொள்.உன் திறமையின்மேல் நம்பிக்கைக்கொள். பொறுமையை மேற்கொள். பொறுமையும் நிதானமும் உன்னை உயர்த்தும். நம்பு. வெற்றி நிச்சயம்.

அறம்...2

ஆறு தனக்காக ஓடுவதில்லை.
அறவோர் தனக்காக வாழ்வதில்லை!

அறம்

அறம் ......

மனத்தூய்மையோடு செய்யும் செயல்கள் யாவும் அறமே. நாம் மனத்தூய்மையோடு எண்ணினாலும் பேசினாலும் செயல்கள் செய்தாலும் அவையாவும் அறமே. நம் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பது மனம். மனம் தூய்மையாய் இருந்தால், எண்ணம் தூய்மையாய் இருக்கும். சொல் தூய்மையாய் இருக்கும். செயல்கள் தூய்மையாய் இருக்கும்.