Showing posts with label ஆசிரியர்களுக்கு. Show all posts
Showing posts with label ஆசிரியர்களுக்கு. Show all posts

Wednesday, 16 March 2011

உரை:2 அறத்தை மறந்தவர்கள்

                (துறவி  அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

           திருவள்ளுவர் அறத்துடன் வாழ  வேண்டும் என்பதை இவ்வாறு
கூறுகின்றார்.

                    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
                    பழித்தது ஒழித்து விடின்


          மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றால், தலையை மொட்டை அடிப்பதும், தலையில் நீண்ட முடியை வளர்த்துக் கொள்வதும் தேவையில்லை. மனம் மாசுபட்டு, அசுத்தப்பட்டு இருக்கும்போது, எதற்காக வெளிச்சடங்குகள். அதனால் பயனில்லை. உலகம் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னதோ அதைச் செய்யாதே! அதுபோதும் நீ தெய்வலோகம்  போகலாம்; மோட்சத்திற்குப்  போகலாம் என்கிறார் திருவள்ளுவர்.

          இங்கு உலகம் என்பது சான்றோர்களையும்  அறவோர்களையும்  குறிக்கும். புத்தர்,வள்ளுவர் போன்ற அறவோர்கள் சொன்ன அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் இவ்வுலகிலும்  இன்பம் வரும்; அடுத்த உலகிலும் இன்பம் வரும்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது.  இந்த குறுகிய வாழ்க்கையில் நாம் அதிகபட்சம் வாழக்கூடியது ஒரு நூறு ஆண்டுதான்.  இந்தகுறுகிய வாழ்க்கையில் மக்கள் எதைச் செய்ய வேண்டும்? இக்குறுகிய காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது அறம்தான்  என்று வள்ளுவர் கூறுகின்றார்.

                  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
                   உயற்பால தோரும் பழி

மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய  வேண்டியது அறம்தான். அறம் செய்ய வேண்டும் என்றால்  என்ன? அறநெறி அறிந்து, குற்றங்கள் தவிர்த்து வாழ வேண்டும். அறநெறி அறிந்து வாழ வேண்டும் என்றால் என்ன? தர்ம வழியில் காலெடுத்து  நடக்க வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகின்றார்.

உரை:1 அறத்தை மறந்தவர்கள்

  (துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

அறத்தை மறந்து குற்றம் செய்து வாழும் ஒரு மனிதன், தன் குற்றங்களுக்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், வெட்கப்படாமல், நாணாமல்,  தன் குற்றங்களை மிகக் கெட்டிக்காரத்தனமாக மூடி மறைத்து, மக்கள் மத்தியில் நல்லவன் போல் நடந்து கொள்ளலாம். இவ்வாறு நல்லவன் போல் நடந்து கொள்ளும்  ஒருவன், ஆலயம் சென்று பலருக்கு முன்னால்,பல சடங்குகள் செய்து இறைவனை பிராத்தனை செய்தபோதிலும், இவனுடைய மனதிற்கும் வாய்க்கும் ஒற்றுமை இல்லாததால், உண்மையில் இவன் செய்யும் பிராத்தனை இவன் மனமறிந்து சொல்லும் பொய்.ஏன்? இவன் குற்றங்களை இறைவன் அறிவார்.

இதைத்தான் திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகின்றார்.

         வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
         தான்அறி குற்றப் படின்

இன்னொரு மனிதன் அவன் வாழ்வது குடிசையாக இருந்த போதிலும், தான் செய்த குற்றத்திற்காக மன்ம் வருந்தி, வேதனைப்பட்டு, வெட்கி, நாணி அக்குடிசையிலேயே மண்டியிட்டு; இறைவனிடன் மன்னிப்புக்கோரி, போதும் இதுவரை செய்த பாவங்கள்; இனிமேலும் பாவங்கள் செய்வதில்லை,என உறுதி பூண்டு, குற்றங்கள் நீக்கி அறவழியில் நடந்தாரே      என்றால், அந்த மனிதரின் வாழ்க்கை, கரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நிலா வெளியே வரும்போது எப்படி அழ்காக பிரகாசிக்கின்றதோ,அவ்வாறு அவரின் வாழ்வும் பிரகாசமாக அமையும். அது குடிசையாக இருந்த போதிலும், அங்கு இறைவன் இருப்பார்.