Tuesday, 29 March 2011

சிந்தனைத் துளிகள்

1.ஒருவனிடம் இருக்கும்  உயர்ந்த ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்ப்பது கல்வியே ஆகும்.

2.கற்றவர் என்பவர் கற்றபடி நிற்பவரே.

3.உண்மையைப் புறக்கணித்து வாழ்ந்து வருபவன் மாய்ந்து போனவனுக்கு ஒப்பாகிறான்.

4.உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால்  எதற்காகவும்  உண்மையைத்  தியாகம் செய்யக் கூடாது.

5.எவன் பிறரது  நற்செயல்களைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதில்லையோ; அவனால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாது.

6. செயல்கள் சிறியதோ பெரியதோ, நம்மால் செய்யக் கூடியவற்றைச் சலிப்பின்றிச் செய்பவரே போற்றுதற்குரியவர்.

7.வெற்றியின் இரகசியம் எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.

8.உன் உயர்வை உன்னைக் காட்டிலும் உயர்ந்தவனை வைத்து உவமைப்படுத்துவாயாக.

9.பிறர் குற்றம் காண்பதுவும்  தன் குற்றம் மறைப்பதுவும், மடைமையின் முழுமையான அடையாளம்.

10.அமையும் வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுதுகிறவனே உண்மையான பெருமைக்குரியவன்.

நேர்மை என்றால் என்ன?

நேர்மை என்பது நமக்கு நாமே உண்மையாக ஒழுகுதல் ஆகும்.

நேர்மை என்பது உண்மை பேசுதல்.
நேர்மை என்பது பொய்யுரையாமை
நேர்மை என்பது களவு செய்யாமை
நேர்மை என்பது வஞ்சனை செய்யாமை
நேர்மை என்பது பிறரை ஏமாற்றாமை
நேர்மை என்பது கபடமற்ற நடத்ததை

யார்  நேர்மையானவர்?

நேர்மையானவர் உண்மை பேசுவார்; மனமறிய பொய் பேசமாட்டார்; அவருடைய சொல்லில் உண்மை இருக்கும்; பிறர் அறிந்திலர் என்பதற்காகத் தம் மனம் அறிந்த ஒன்றை மறைத்துப் பொய் பேச மாட்டார்.

நேர்மையானவர் களவு செய்ய மாட்டார்; ஏமாற்ற மாட்டார்; வஞ்சனை செய்ய
மாட்டார். அவர் சொல்லிலும் செயலிலும்  உண்மை இருக்கும்.

அவர் சொல் தவறாதவர். எதைச் செய்கிறேன் என்று சொன்னாரோ அதைச் செய்வார். அவர்சொல்லிலும் செயலிலும்  முரண்பாடு இருக்காது.

நேர்வழியில் தவறாமல்  நடந்து, நல்வழியில்  பொருள் தேடுவார்; வஞ்சகதினால் பொருளோ, பதவியோ, அதிகாரமோ தேடமாட்டார்.

அவர் கபடமற்றவர்; நடத்தையில் ஒளிவு மறைவு இல்லாதவர்; வெளிஉலகில்
நல்லவர்போல் நடித்து மற்றவர் காணாமல் தீயொழுக்கத்தில் ஒழுகமாட்டார்.

உண்மையில்லாதவற்றை உண்மையென்று பேசமாட்டார்; பொய்யை மெய்போல புனைந்துரைக்க மாட்டார்; அவர் நம்படத்  தகுந்தவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்;

Sunday, 20 March 2011

பக்திக்கு அடிப்படை நல்லொழுக்கம்

(துறவி அவர்கள் ஆற்றிய உரையின்  பகுதி)

             எதற்காக நாம் பக்தி கொள்ள வேண்டும்?

             நாம் நம்மையே ஆராய்ந்து பார்த்தோமென்றால், நம்மிடையே பல‌ குறைபாடுகள்  இருப்பதை உணரலாம். குறைபாடுகள் என்பது  நம்மிடையே உள்ள‌ குற்றம் குறைகள்.

         உதாரணத்திற்கு, பிறர் செல்வாக்கைக் கண்டு  பொறாமைப் பட்டிருப்போம்; பொறாமையினால் குற்றமற்றோர் மீது குற்றம் சுமத்தியிருப்போம்; குற்றம்   செய்துவிட்டு அது  நியாயமானதே  என்று விவாதித்திருப்போம்;  நம் குற்றத்தை மறைக்கப் பிறர் மீது பழிசுமத்தியிருப்போம்; நம் குற்றத்தை மறைத்து நல்லவர்போல் நடித்திருப்போம்; தற்பெருமையில் தன்னை உயர்த்தியும், பிற‌ரைத் தாழ்த்தியும் பேசி  இருப்போம்;  நல்லோரின் நல்லொழுக்க நெறிகளைப் பரிகாசித்திருப்போம்; சினம் கொண்டு வைதிருப்போம்; சண்டை சச்சர‌வு செய்திருப்போம்; பிறரைப் பழித்துப் பேசியிருப்போம். இதுபோல் பல குறைபாடுகள் நம்மிடம் இருப்பதை நாம் உணரலாம்.   

             நம்மிடமுள்ள குறைபாடுகளை, நம்மிடமுள்ள அசுத்தங்கள் என்று பெரியோர் கூறுவர். நம்மிடம் பல அசுத்தங்கள்  உண்டென்பதால், நம்மை தூய்மையற்றோர் என்றும், அசுத்தமானவர்கள் என்றும், பெரியோர் கூறுவர். புறத்தே நாம் உடலைக் கழுவி ஆடை ஆபர‌ணங்களால் அழகுபடுத்திக் கொண்ட போதிலும், அகத்தே நம்மிடம் பல குறைபாடுகள் உண்டென்பதால், நம்மை அசுத்தமானவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

            நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் நலனைக் கெடுக்கும்; நம் பெருமையைக் கெடுக்கும்; நம் புகழைக் கெடுக்கும்; நம் பொருளை அழிக்கும்; நம் சுகத்தைக் கெடுக்கும்; உள்ளிருந்தே கொல்லும் நோயைப் போல், நம்மிடமுள்ள அசுத்தங்கள் நம் வாழ்வைக் கெடுக்கும்.

            எப்படி நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்குவது?

            பக்தியினால் நம்மிடமுள்ள  அசுத்தங்களை நாம் போக்கலாம். அதாவது, தூய்மையற்ற நாம் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்கும்; அசுத்தமான  நாம் நம்மைப் புனிதமாக்கிக் கொள்வதற்கும்; மாசு படிந்துள்ள நம் மனத்தை  நாம் தூய்மை படுத்திக் கொள்வதற்கும்; நாம் பக்தி கொள்ள வேண்டும். உள்ளத்தில் க்தி  கொண்டு,  நம்மிடமுள்ள அசுத்தங்களை நாம் போக்கினோமென்றால்,  இவ்வுலக வாழ்விலும் சுகம் பெற்று; உடலைவிட்டு  உயிர் பிரிந்தபின், அடுத்த உலகிலும்  தெய்வலோக சிறப்பைப் பெறலாம். இதுவே பக்தி கொள்வதற்கான நோக்கமாகும்.

             உடலில் அழுக்கு இருந்தால் அதை எப்படிப் போக்குவது?

           நீராலும், குளிக்க உபயோகிக்கும் சவர்க்காரத்தினாலும், உடலைச் சுத்தப்படுத்துபவரின் முயற்சியாலும் உடலில் இருக்கும் அழுக்கைப் போக்கலாம். இதுவே உடலைச் சுத்தப்படுத்துவதற்கான சரியான முறையாகும்.

              அதுபோல், தூய்மையற்ற நாம், சரியான முறையால் நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்.அசுத்தமான நாம் சரியான முறையால் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும்; மாசுபடிந்துள்ள நம் மனத்தைச் சரியான முறையால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
              எந்த சரியான முறையில்?

              இறைவனின் அருளால் சான்றோர் அருளியுள்ள தர்ம உபதேசங்களை (ந‌ன்னெறி உபதேசங்களை) கற்க வேண்டும். அல்லது, கல்வி அறிவும் அன்பும் அறமும் பக்தியும் உள்ள நல்லோரை நாடி, அவர்கள் கூறும் தர்ம உபதேசங்களை நம்பும் மனத்துடன் கேட்க வேண்டும்.

               தர்ம  உபதேசங்களை நம்பும் மனதுடன் கேட்கும் ஒருவர், "பாவம் உண்டு; புண்ணியம் உண்டு; நல்வினை உண்டு; தீ வினை உண்டு; நல்லொழுக்கம் உண்டு; தீயொழுக்கம்  உண்டு; செயல்களுக்குப் பிற்பயன் உண்டு; அடுத்த உலகம் உண்டு; அடுத்த உலகில் உயிர்கள் தம் செயல்களின் பலனை அனுபவிக்க வேண்டும்" என இவர் புரிந்து கொள்வார்.

             "குற்றங்களைத் தவிர்த்து, நல்லொழுக்கங்களை  மேற்கொண்டு, நற்கருமங்களைச்
செய்து ந
ல்வாழ்வு வாழ்வோர், இவ்வுலக வாழ்விலும்  சுகம்  பெறுவார்கள்; மரணத்திற்கு அப்பால் அடுத்த உலக வாழ்விலும் தெய்வலோகத்திலும் பிறந்து சுகம்பெறுவார்கள்," என இவர் புரிந்து கொள்வர்.

           இவை யாவற்றையும் புரிந்து கொண்ட இவர், அறியாமையில் இருந்து விலகி, அறிவுடைமையைப் பெறுவார். அறிவுடைமையைப் பெற்ற இவர், த‌ம்மிடமுள்ள அசுத்தங்களைக் காண்பார். அறிவுடைமையினால் தம்மிடமுள்ள அசுத்தங்களைக் கண்ட இவர், அடுத்து அசுத்தங்களைப் போக்க முயற்சி செய்ய வேண்டும்.

              எப்படி முயற்சி செய்ய வேண்டும்?

             உள்ளத்தில் பக்திக் கொண்டு,  இதுநாள்வரை செய்துள்ள குற்றங்களுக்காக உள்ளம் வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இனிமேலும் இது போன்ற குற்றங்களைச் செய்வதில்லை என உறுதி பூண்டு, தீயொழுக்கத்தில் இனிமேலும் செல்லாமல் தம்மைக் காத்து, நல்லொழுக்க நெறிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

             குற்றங்களைத் தவிர்க்கவும், நல்லொழுக்க நெறிகளை மேற்கொள்ள‌வும், மனம் தளர்ச்சி அடையாமல் போராட வேண்டும். மனம் தளர்ச்சி அடையாமல் போராடினாரென்றால், படிப்படியாக அசுத்தங்கள் இவரை விட்டு விலகும். பக்தியிலும் அறத்திலும் நற்குணங்களிலும் நற்பண்புகளிலும் இவர் வளர்ந்து தூய்மை அடைவார். இவ்வுலக வாழ்விலும்  இவர் சுகம் பெறுவார்; மரணத்திற்கு அப்பால் மறு உலகில் தெய்வலோகத்தில் பிறந்து சுகம் பெறுவார்.


           



Wednesday, 16 March 2011

உரை:2 அறத்தை மறந்தவர்கள்

                (துறவி  அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

           திருவள்ளுவர் அறத்துடன் வாழ  வேண்டும் என்பதை இவ்வாறு
கூறுகின்றார்.

                    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
                    பழித்தது ஒழித்து விடின்


          மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்றால், தலையை மொட்டை அடிப்பதும், தலையில் நீண்ட முடியை வளர்த்துக் கொள்வதும் தேவையில்லை. மனம் மாசுபட்டு, அசுத்தப்பட்டு இருக்கும்போது, எதற்காக வெளிச்சடங்குகள். அதனால் பயனில்லை. உலகம் எதைச் செய்யக்கூடாது என்று சொன்னதோ அதைச் செய்யாதே! அதுபோதும் நீ தெய்வலோகம்  போகலாம்; மோட்சத்திற்குப்  போகலாம் என்கிறார் திருவள்ளுவர்.

          இங்கு உலகம் என்பது சான்றோர்களையும்  அறவோர்களையும்  குறிக்கும். புத்தர்,வள்ளுவர் போன்ற அறவோர்கள் சொன்ன அறத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால் இவ்வுலகிலும்  இன்பம் வரும்; அடுத்த உலகிலும் இன்பம் வரும்.

மனித வாழ்க்கை மிகவும் குறுகியது.  இந்த குறுகிய வாழ்க்கையில் நாம் அதிகபட்சம் வாழக்கூடியது ஒரு நூறு ஆண்டுதான்.  இந்தகுறுகிய வாழ்க்கையில் மக்கள் எதைச் செய்ய வேண்டும்? இக்குறுகிய காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது அறம்தான்  என்று வள்ளுவர் கூறுகின்றார்.

                  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
                   உயற்பால தோரும் பழி

மனிதர்கள் வாழ்க்கையில் செய்ய  வேண்டியது அறம்தான். அறம் செய்ய வேண்டும் என்றால்  என்ன? அறநெறி அறிந்து, குற்றங்கள் தவிர்த்து வாழ வேண்டும். அறநெறி அறிந்து வாழ வேண்டும் என்றால் என்ன? தர்ம வழியில் காலெடுத்து  நடக்க வேண்டும் என்பதை வள்ளுவர் விளக்குகின்றார்.

உரை:1 அறத்தை மறந்தவர்கள்

  (துறவி அவர்கள் ஆற்றிய உரையின் பகுதி)

அறத்தை மறந்து குற்றம் செய்து வாழும் ஒரு மனிதன், தன் குற்றங்களுக்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல், வெட்கப்படாமல், நாணாமல்,  தன் குற்றங்களை மிகக் கெட்டிக்காரத்தனமாக மூடி மறைத்து, மக்கள் மத்தியில் நல்லவன் போல் நடந்து கொள்ளலாம். இவ்வாறு நல்லவன் போல் நடந்து கொள்ளும்  ஒருவன், ஆலயம் சென்று பலருக்கு முன்னால்,பல சடங்குகள் செய்து இறைவனை பிராத்தனை செய்தபோதிலும், இவனுடைய மனதிற்கும் வாய்க்கும் ஒற்றுமை இல்லாததால், உண்மையில் இவன் செய்யும் பிராத்தனை இவன் மனமறிந்து சொல்லும் பொய்.ஏன்? இவன் குற்றங்களை இறைவன் அறிவார்.

இதைத்தான் திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகின்றார்.

         வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
         தான்அறி குற்றப் படின்

இன்னொரு மனிதன் அவன் வாழ்வது குடிசையாக இருந்த போதிலும், தான் செய்த குற்றத்திற்காக மன்ம் வருந்தி, வேதனைப்பட்டு, வெட்கி, நாணி அக்குடிசையிலேயே மண்டியிட்டு; இறைவனிடன் மன்னிப்புக்கோரி, போதும் இதுவரை செய்த பாவங்கள்; இனிமேலும் பாவங்கள் செய்வதில்லை,என உறுதி பூண்டு, குற்றங்கள் நீக்கி அறவழியில் நடந்தாரே      என்றால், அந்த மனிதரின் வாழ்க்கை, கரிய மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருந்த நிலா வெளியே வரும்போது எப்படி அழ்காக பிரகாசிக்கின்றதோ,அவ்வாறு அவரின் வாழ்வும் பிரகாசமாக அமையும். அது குடிசையாக ருந்த போதிலும், அங்கு இறைவன் இருப்பார்.

Tuesday, 15 March 2011

அறத்தின் நன்மைகள்.....


 தர்மவழியில் நடப்போருக்கு ஐந்து நன்மைகள் வரும் என பகவான் புத்தர் கூறுகிறார்.

1.புகழ் வரும்.
இவர் அறவழியில் நடப்பதால், மக்கள் இவரின் அறத்தையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார்கள்.

2.செல்வம் பெருகும்.
இவர் அறநெறி அறிந்து தேடிய பொருள்,இவருக்கும் உதவும்.இவருடைய பிள்ளைகளளுக்கும் உதவும்.இவருடைய பரம்பரைக்கும் நிலைத்து நிற்கும்.


3.அச்சம் இருக்காது.
இவர் உள்ளத்தில் அச்சம் இருக்காது. எங்கெல்லாம் மக்கள் கூடியிருக்கறார்களோ அங்கெல்லாம் இவர் உள்ளத்தில் அச்சமில்லாமல் போவார். இவரிடம்  குற்றம் இல்லாததால், இவருடைய உள்ளத்தில் அச்சம் எழாது.

4.பயமில்லாத மரணம்.
மரணம் வரும்போது இவர் உள்ளத்தில் அச்சம் எழாது;மனதில் குழப்பம் எழாது.மகிழ்ச்சி எழும். அமைதியாக இறப்பார்.

5. அடுத்த பிறப்பு
உடலைவிட்டு உயிர் பிரிந்தபின் இவர் தெய்வலோகத்தில் பிறப்பார்.

Friday, 11 March 2011

RIGHT BELIEVE


DO NOT BELIEVE IN ANYTHING (SIMPLY) BECAUSE
YOU HAVE HEARD IT.

DO NOT BELIEVE IN TRADITIONS BECAUSE THEY HAVE
BEEN HANDED DOWN FOR MANY GENERATIONS.

DO NOT BELIEVE IN ANYTHING BECAUSE IT IS
SPOKEN AND RUMOURED BY MANY.

DO NOT BELEIVE IN ANYTHING (SIMPLY) BECAUSE IT
IS FOUND WRITTEN IN YOUR RELIGIOUS BOOKS.

DO NOT BELEIVE IN ANYTHING MERELY ON THE
AUTHORITY OF YOUR TEACHERS AND ELDERS.

BUT AFTER OBSERVATION AND ANALYSIS, WHEN YOU
FIND THAT ANYTHING AGREES WITH REASON AND IS
CONDUCIVE TO THE GOOD AND BENEFIT OF ONE AND
ALL THEN ACCEPT IT AND LIVE UP TO IT.

BUDDHA

Thursday, 10 March 2011

தம்பிக்கு...


தம்பி, உன் திறமையை நன்கு அறிந்து கொள். அது உன்னுள் மறைந்துள்ளது. உன் திறமையை வளர்த்துக் கொள்ள நீ உழைக்க வேண்டும். அதிகம் வாசி. நிறையத் தேடு. தேடலை நிறுத்தாதே.உன்மேல் நம்பிக்கைக்கொள்.உன் திறமையின்மேல் நம்பிக்கைக்கொள். பொறுமையை மேற்கொள். பொறுமையும் நிதானமும் உன்னை உயர்த்தும். நம்பு. வெற்றி நிச்சயம்.

அறம்...2

ஆறு தனக்காக ஓடுவதில்லை.
அறவோர் தனக்காக வாழ்வதில்லை!

அறம்

அறம் ......

மனத்தூய்மையோடு செய்யும் செயல்கள் யாவும் அறமே. நாம் மனத்தூய்மையோடு எண்ணினாலும் பேசினாலும் செயல்கள் செய்தாலும் அவையாவும் அறமே. நம் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பது மனம். மனம் தூய்மையாய் இருந்தால், எண்ணம் தூய்மையாய் இருக்கும். சொல் தூய்மையாய் இருக்கும். செயல்கள் தூய்மையாய் இருக்கும்.