Saturday 9 April 2011

அறநீதியும் தண்டனையும்


        எந்த ஒரு செயல் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்துமோ; எதன் பிற்பயனை அழுது கொண்டே அனுபிவிக்க வேண்டியிருக்குமோ, அது நற்செயல் ஆகாது.

      எவ்வகையான் செயல்கள் அதைச் செய்தபின், அதை நினைத்து மனம் வருந்தும்? பாவச் செயல், அதைச் செய்த பின், அதை நினைத்து மனம் வருந்தும். எவ்வகையான செயலின் பயனை அழுது கொண்டே அனுபவிக்க வேண்டியிருக்கும்? பாவச் செயலின் பயனை அழுதுகொண்டே  அனுபவிக்க வேண்டியிருக்கும்.
      பாவ கருமங்களைச் செய்தோர், பாவம் பழுக்கும்போது, அதன் பிடியிலிருந்து தப்ப முடியாமல், "பாவம் செய்தேனே!" என் மனம் வருந்தி, அதன் பயனை அழுதுகொண்டே அனுபவிப்பார்கள்.

           பாவம் என்றால் என்ன? பாவம் என்பது, தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீங்கு செய்தலாகும்.

"தன் சுகத்தை நாடி, தன்னைப்போல் சுகத்தை நாடும் பிறருக்குத் தீமை செய்தல்" என்பதன் பொருள் என்ன?

         பிறர் நமக்குத் தீங்கு செய்தால், அது நமக்கு வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்; துன்பத்தைத் தரும். அதுபோல் நாம் பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், அது பிறருக்கும் வேதனையைத் தரும்; துயரத்தைத் தரும்;  துன்பத்தைத் தரும்.

        தீயவை நமக்குத் துன்பத்தைத் தருவது போல், பிறருக்கும் அது  துன்பத்தைத்  தரும் என்பதை மறந்து, நாம் ஒரு இலாபத்தை நாடி, பிறருக்குத் தீங்கு செய்தோமென்றால், நாம் பாவம் செய்தவர்களாகிறோம்.

           தன் சுகத்தை நாடி, பாவம் செய்தவனுக்கு, அப்போது ஒரு சுகம் கிடைத்த போதிலும், அது பிறருக்குத் துன்பத்தைத் தரும்; பின்னால் இவனுக்குத் துன்பத்தையே தரும்.

இதையே பகவான் புத்தர் இவ்வாறு விளக்கியுள்ளார்:

 இரகசியமாகவோ, பலர் அறியவோ, இப்போது  நீ தீய செயலைச் செய்தாய் என்றால், பின்னால் அதனிடமிருந்து தப்ப முயன்றாலும், நிச்சயமாக நீ துன்பப்படுவாய்.

           ஆகவே, இப்போது நாம் பிறருக்குத் தீமை செய்தோம் என்றால்,பின்னால் நாமும் அதனால் துன்பப்படுவோம்.

திருவள்ளுவரும் இதையே இவ்வாறு கூறியுள்ளார்:

"நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்"

அதாவது, துன்பம் யாவும் துன்பம் செய்தோரையே நாடும்.

இது அறநீதி.அற நீதியை இறைத் தண்டனை என்றும்; வினைப்பயன் என்றும்;  சான்றோர் கூறுவதுண்டு. அறநீதியின் செயல் முறையிலிருந்து  எவருமே தப்ப முடியாது.ஏன்? அறநீதி ஒருபோதும் தவறுவதில்லை.



1 comment:

  1. அறநீதி ஒருபோதும் தவறுவதில்லை.//
    True.

    ReplyDelete